சருமம் வறட்சியடைந்து காணப்படுதல் என்பது ஒரு நோயல்ல. வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பது தெரியுமா ?
காற்று
உலர்ந்த காற்றினால், முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். ஏனெனில் உலர்ந்த காற்றானது சருமத்திலுள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி சருமம் களையிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல், சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.

வெந்நீர்
அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசையானது, சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவும். ஆனால் வெந்நீரில் நீண்ட நேரம் இருப்பதால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் வெளியேற்றி உலரச் செய்துவிடுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணமாகும். இது சருமத்தில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடுகிறது.

சோப்புக்கள்
பலவகையான சோப்புக்களைப் பயன்படுத்துதலும், சரும வறட்சிக்குக் காரணமாகும். வெந்நீரைப் போலவே, இதுவும் சருமத்தைப் பாதுகாக்கும் எண்ணெய்ப் பசையை நீக்கிவிடுகிறது. கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவதாலும், சருமம் மிகவும் வறண்டு போகும். சில நேரங்களில் சோப்புக்கள் சரும வெடிப்புகளையும், இரத்தக்கசிவுகளையும் ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தொற்றும் ஏற்படலாம். ஆகவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் கலந்த சோப்புகள்/ஹேண்ட் வாஷ் மற்றும் கிளீன்ஸர்களையும் பயன்படுத்துவது நல்லது.

நோய்கள்
எக்ஸிமா, சொரியாஸிஸ், நீரிழிவு போன்ற நோய்களும், வறண்ட சருமத்தை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இவைகளால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு அடிக்கடி மாறுபடுவதினால், சருமம் வறட்சி அடைகிறது. மேலும் தைராய்டு சார்ந்த மருந்துகளாலும், சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசை நீங்கி வறண்ட சருமம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சத்தான மற்றும் சரிவிகித உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பதும், சரும வறட்சிக்குக் காரணமாகும். அதுவும் வயதான பெண்களுக்கு, ஹார்மோன்களின் மாறுபாடுகளால் வறண்ட சருமம் ஏற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here