யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்களெனில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார்.

காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கருடன் சனிக்கிழமை நடந்த சந்திப்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அவரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகின்றது.

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கு அப்பால் யுத்தத்தின் முடிவில் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரின் அறிவுப்புக்கிணங்க பெற்றோரால் ,மனைவிமார்களினால், பிள்ளைகளினால் ஒப்படைக்கப்படட பெருந்தொகையானவர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பிலும் ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும்.

யுத்தம் நடந்தபோது தற்போதைய ஜனாதிபதியே பாதுகாப்பு செயலாளராக இருந்தார். முப்படைகளும் புலனாய்வுப் பிரிவுகளும் அவரின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இயங்கின.

எனவே இவ்வாறு ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பெரும் தொகையானவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டார்கள், பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது, இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்களா இல்லையா என்பது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதிக்கு மட்டுமே நன்கு தெரியும். எனவே அவர் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here