காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாநந்தன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டிவேல் தெருவிலுள்ள அவரது கடையில் இருந்த மாநகர சபை உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அவர் மீது நான்கு முதல் ஐந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய மாநகர சபை உறுப்பினர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் ஆதரவு கரம் நீட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உதவி செய்யும் வகையில் அமைப்பொன்றை நிறுவி, அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விபரங்களை திரட்டும் பணியில் அண்மைக்காலமாக ஈடுபட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு