வட மாநிலத்தில் தொடர் மழை! பலர் பலி!

அசாம் மாநிலத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடை மழை காரணமாக, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளது.

கடும் மழையால் பிரம்மபுத்திரா மற்றும் கோலாகட் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

இதனையடுத்து, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, புதுடெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சில விமான சேவைகளும், ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் அறிவித்துள்ளனர்.

அடைமழையால் மும்பை பெருநகரம் மற்றும் தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

அதேபோல், மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2005 ஆம் மும்பையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 500 பேர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை மராட்டிய மாநிலத்தில் தொடரும் கன மழைக் காரணமாக இதுவரை சுமார் எழு பேர் வரையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு