மட்டக்களப்பிலும் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கை!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் முகாமில் ஆயுதங்களை தேடி இன்று (புதன்கிழமை) 2ஆவது நாளாக நீதிபதி முன்னிலையில் நிலத்தை தோண்டும் நடவடிக்கை நடைபெற்றது.

கடந்த வாரம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள காந்திபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்றபோது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அதனையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களையும் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாக தெரியவந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆயுதம் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும், இதுவரை எவ்வித ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பகிர்வதற்கு