வலி. வடக்கில் 232 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுகிறது…

வலி. வடக்கில் 232 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுகிறது…

வலி. வடக்கில் 232 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படுகிறது… பிரமாண்ட கடற்படை தளம் அமைகிறது: சத்தமின்றி நடக்கும் காரியம்!

வலிகாமம் வடக்கு, காங்கேசன்துறையில் பொதுமக்களிற்கு சொந்தமான 232 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் இரகசிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. காணி சுவீகரிப்பிற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதை உறுதிசெய்துள்ளது.

வலிவடக்கு, காங்கேசன்துறை பகுதியில், காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வரம் ஆகிய கிராமசேவகர் பிரிவில் உள்ள 232 ஏக்கர் காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளன.

கடற்படை முகாமிற்கு 167 ஏக்கர் காணியும், சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக சுற்றுலா அதிகாரசபைக்கு 65 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்படவுள்ளது.

சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியிலேயே, காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையும் உள்ளடங்குகிறது.

சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் பெரும்பாலானவை தனியாருக்கு சொந்தமானவை.

சத்தமில்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த காணி சுவீகரிப்பு முயற்சி, காணிசமான படிமுறையை கடந்து விட்டது. அந்த பகுதியில் அளவை செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு, தனியார் காணி உரிமையாளர்களிற்கும் பிரதேச செயலகத்தில் இருந்து இன்று கடிதம் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு படிமுறையின், செக்சன்- 2 பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக சுவீகரிப்படவுள்ள காணிகளில் பெரும்பாலானவை தனியாருக்கு சொந்தமானவை.

காங்கேசன்துறை துறைமுகத்தை அண்டிய இந்த பகுதி எதிரகாலத்தில் சுற்றுலா துறைக்கு மிக உகந்த பகுதியாக கணிக்கப்பட்ட பகுதியாகும். அத்துடன், தமிழர்களின் பாரம்பரிய, புராதன வழிபாட்டிடங்களையும் கொண்ட பகுதியாகும். சுவீகரிக்கப்படும் பகுதிக்குள் சுமார் 7 வழிபாட்டிடங்கள் உள்ளடங்குகின்றன.

சுவீகரிக்கப்படும் காணியில், ஸ்ரீமத் நாராயண ஆலயத்திற்கு (கிருஷ்ணர் ஆலயம்) சொந்தமான 47 ஏக்கர் காணி, கதிரையாண்டவர் ஆலயத்தின் 25 ஏக்கர் காணி, சோலை வைரவர் மற்றும் சில ஆலயங்களின் 25 ஏக்கர் காணி, சடையம்மா சமாதி ஆலயத்தின் 20 ஏக்கர் காணி மற்றும் புராதன நல்ல தண்ணீர் கிணறு மற்றும் தனியார் காணிகள் இதில் உள்ளடங்குகின்றன.

அத்துடன், பழைய தெல்லிப்பழை வைத்தியசாலை காணியும் இதற்குள் உள்ளடங்குகிறது.

காணி சுவீகரிப்பு படிமுறையில், செக்சன் 2 படிமுறையென்பது, காணி உரிமையாளர்களிற்கு தகவல் வழங்கி, அளவீட்டுக்கான படிமுறையாகும்.

சுவீகரிக்கப்படவுள்ள காணிகள், நிலஅளவை திணைக்களத்தினால் எந்த சமயத்திலும் அளவீடு செய்யப்படலாம். அளவீடு செய்யும்படியான அறிவித்தல், நில அளவை திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டு விட்டது. எந்த சமயத்திலும் காணி அளவீட்டு பணிகள் நடக்கலாமென தெரிகிறது.

இதேவேளை, இந்த காணி சுவீகரிப்பு முடிவு வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்டதாவும், அந்த செயலணியின் அறிவித்தலின்படியே தாம் நடப்பதாகவும், தொடர்புடைய அரச அதிகாரிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கு ஜனாதிபதி செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள், ஈ.பி.டி.பி எம்.பி, சுதந்திரக்கட்சியின் தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கு அவர்கள் மௌனமாக சம்மதம் தெரிவித்துள்ளதாகவே அர்த்தப்படுகிறது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts