சத்தியமூர்த்தியின் வரவிற்கு பச்சைக்கொடி காட்டிய சிறிதரன்…

சத்தியமூர்த்தியின் வரவிற்கு பச்சைக்கொடி காட்டிய சிறிதரன்…

சத்தியமூர்த்தியின் வரவிற்கு பச்சைக்கொடி காட்டிய சிறிதரன்… எதிரிகளை அதிகமாக்கும் சரவணபவன்: மாகாணசபை திருவிழா- 3

மாகாணசபை தேர்தல் களத்தில் யார் யாரெல்லாம் களமிறங்கலாம்? எந்த கட்சிக்கு எத்தனை ஆசனம் கிடைக்கலாம்? முன்னைய மாகாணசபை உறுப்பினர்களில் யாரெல்லாம் வெட்டிவிடப்படுவார்கள்? என்ற முழுமையான அலசலில், இந்த பாகத்தலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகாம் பற்றிய தகவல்களை தருகிறோம்.

இந்த தொடரின் முதல்பாகத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தோம். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வே.சிவயோகன் இந்த முறை வெட்டிவிடப்பட போகிறார், அவரது சமூகத்தை சமாளிக்க, ந.இராஜேந்திரம் பனை அபிவிருத்திசபை தலைவராக நியமிக்கப்பட போகிறார் என எழுதியிருந்தோம். இப்பொழுது அவர் அந்த பதவியை ஏற்றுவிட்டார். ஆக, வே.சிவயோகனிற்கு இப்பொழுதே சங்கு சத்தம் பலமாக கேட்க ஆரம்பித்திருக்கும்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை அரசியலுக்கு வரும்படி, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் அழைத்திருந்தது.

அந்த கூட்டணியின் முக்கியஸ்தரான, திருநெல்வேலி வைத்தியர் ஒருவர் அழைத்ததாக தகவல். ஆனால், வைத்தியசாலை பணிப்பாளர் மறுத்துவிட்டதாக தகவல்.

காரணம்- அவர் பரீட்சையொன்றில் தோற்றி, வெளிநாட்டு உயர்கற்கையொன்றை பூர்த்தி செய்ய தயாராகிறார்.

இந்த சமயத்திலேயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அவரை களமிறங்கும்படி அழைத்தனர். எப்பொழுதாவது ஒருநாள் அரசியலுக்கு வரும் எண்ணம் பணிப்பாளரிடம் இருப்பதாக கருதியதாலேயே அவரை அழைத்ததாக கூட்டமைப்பின் தரப்புக்கள் தெரிவித்தன. அத்துடன், வடமாகாணசபையின் அமைச்சு பொறுப்பொன்றை தர தயாராக இருப்பதாகவும் வாக்களித்தனர்.

கிளிநொச்சியை சேர்ந்த த.சத்தியமூர்த்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலுக்கு அழைப்பதை, கிளிநொச்சி எம்.பி சிறிதரன் விரும்பமாட்டார் என்றுதான் பலரும் கருதுகிறார்கள்.

ஆனால், இதிலுள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால்- சத்தியமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்குவதை சிறிதரனும் மனப்பூர்வமாக விரும்புகிறார் என்று தமிழ்பக்கத்திடம் பேசிய தமிழரசுக்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். அதற்கான பச்சைக்கொடியும் காண்பிக்கப்பட்டுள்ளதாம்!

உயர்கல்வியா, மாகாணசபை தேர்தலா என்பதை த.சத்தியமூர்த்தி முடிவுசெய்யும்போது, அதை அறிந்து கொள்ளலாம்.

அதேபோல, வடமராட்சியில் முன்னாள் அதிபர் சேதுராஜா, வலயக்கல்வி பணிப்பாளர் நந்தகுமார் போன்றவர்கள் கூட்டமைப்பின் பரிசீலனை லிஸ்றில் உள்ளனர். எனினும், அவர்கள் கடமையிலிருந்த சமயங்களில் ஈ.பி.டி.பி மற்றும் மஹிந்த ராஜபக்ச தரப்பு ஆதரவை பெற்றிருந்தார்கள் என்ற விமர்சனமும் கட்சிக்குள் உள்ளது.

வடமராட்சி கிழக்கில் ஓய்வுபெற்ற கோட்டகல்வி பணிப்பாளர் திரவியராசாவும் தீவிர முயற்சியில் இருக்கிறார். ஆனால், ச.சுகிர்தன் மீண்டும் களமிறக்கப்படவுள்ளதால், வடமராட்சி கிழக்கிலிருந்து இன்னொரு வேட்பாளர் களமிறக்கப்படுவது சந்தேகமே.

இதேபோல, இன்னொரு வெட்டுக்குத்தும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

சரவணபவன் தனது தரப்பிலிருந்து மாகாணசபைக்கு பிரதாப்ராஜாவை களமிறக்கப் போகிறார். பிரதாப்ராஜாவை அவர் முன்னிலைப்படுத்தியதால் சரவணபவன் தரப்பிலிருந்த சிலரே அதிருப்தியிலிருக்கிறார்கள். அது தவிர, தமிழரசுக்கட்சிக்குள்ளும் இப்பொழுது அணிகள் தோன்றியுள்ளது.

கடந்த 2ம் திகதி தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளை கூட்டம் நடந்தது. அதில் நல்லூர் பிரதேசசபை தவிசாளர் தியாகமூர்த்தி, பிரதாப்பின் நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை பற்றி சொல்வதற்காக, இடையீடாக கம்பெரலிய திட்டம் பற்றிய சில தகவல்களை தருகிறோம்.

கம்பெரலிய திட்டத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேசசெயலகங்கள், எம்.பிக்களிற்கு பிரிக்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராசா- காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், தீவகம், சரவணபவன்- நல்லூர், சங்கானை, சித்தார்த்தன்- கோப்பாய், உடுவில், சிறிதரன்- கிளிநொச்சி, சுமந்திரன்- பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி.

நல்லூர், சங்கானை பிரதேசங்களில் வேறு எந்த எம்.பிக்களும் உள்நுழைய விடாமல் கவனமாக இருக்கிறார் சரவணபவன். அதனால் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், தொகுதிக்கிளைகள் ஊடாக அபிவிருத்தி முன்மொழிவுகளை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

நல்லூர் தொகுதிக்கிளை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். ஆனால் அவரை வெட்டிவிட்டு, சரவணபவன் அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து வந்தார். அதேபோல, மற்றைய எம்.பிக்களின் பிரதேசங்களிற்குள்ளும் சென்று கூட்டங்களை வைத்து, அபிவிருத்தி முன்மொழிவுகளை சமர்ப்பித்தார்.

இப்பொழுது சுமந்திரன், சரவணபவனிற்கிடையில் இரகசிய பனிப்போர் ஒன்று நிலவுகிறது. சில மாதங்களின் முன்னர், தென்மராட்சிக்குள் நுழைந்து சரவணபவன் அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை கம்பெரலியவிற்காக அனுப்பியிருந்தார். ஆனால், “மேலிடத்தில்“ அது வெட்டப்பட்டு விட்டது. ஏரியா விட்டு, ஏரியா வர வேண்டாமென்பதே அதன் செய்தி!

நல்லூர் தொகுதியிலும் தான் மட்டுமே முன்மொழிவை சமர்ப்பிப்பேன் என சரவணபவன் அடம்பிடிக்க, மாவை சேனாதிராசா ஒரு செக் வைத்திருக்கிறார். தொகுதிக்கான அபிவிருத்தி நிதி 200 இலட்சம்.

நல்லூரில் 89 இலட்சத்திற்கான முன்மொழிவை சீ.வீ.கே.சிவஞானத்தை தயாரிக்க சொல்லிவிட்டு, அதை நேரில் வாங்கிக் கொண்டு, சரவணபவனின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் மாவை. நல்லூரில் 89 மில்லியனிற்காக திட்டம் ரெடி, மிகுதியை நீங்கள் செய்யுங்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

நல்லூர் பிரதேசசபை தவிசாளரை ஒருமுறை தொடர்புகொண்ட, சரவணபவனின் உதவியாளர் பிரதாப்ராஜா, “தகவலிற்காக சொல்கிறேன்“ என சொல்லிவிட்டு, அங்கு செய்யப்படும் அபிவிருத்தி திட்டமொன்றை பற்றி சொன்னாராம். அதுதான் தவிசாளரை கொதிக்க வைத்து விட்டது. “எமது பிரதேசத்தில், எமக்கு தெரியாமல் அபிவிருத்திக்கான இடத்தை தேர்வுசெய்துவிட்டு, “கடைசியில் தகவலுக்காக சொல்கிறேன்“ என்பது, என்னை அவமானப்படுத்துவதாக உள்ளது. நான் எப்பொழுது கட்சிக்கு வந்தேன். இவர்கள் எப்பொழுது கட்சிக்கு வந்தார்கள்?“ என பொரிந்து தள்ளியுள்ளார்.

வெளியில் எதிரிகள் பலமாக இருக்கிறார்களோ இல்லையோ… உள்ளுக்குள் எதிரிகளை அதிகரித்தபடியே செல்கிறார் சரவணபவன்.

(தொடரும்)

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts