அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா டக்ளஸ் தேவானந்தா?…

அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா டக்ளஸ் தேவானந்தா?…

அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா டக்ளஸ் தேவானந்தா?… மாகாணசபை திருவிழா- 4

வடமாகாணசபை தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர்கள் யார்? கட்சிகளின் வாக்கு நிலவரம் எப்படியிருக்கும்? களத்தில் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது பற்றிய இந்த தொடரில் இந்த வாரம் ஈ.பி.டி.பி முகாமிற்குள் நுழையலாம்.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றிய சில தகவல்களை தந்திருந்தோம். யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் சில மேலோட்டமான தகவல்களே அவை. தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்தடுத்த வாரங்களில் தருவோம்.

ஈ.பி.டி.பிக்கு உள்ள பிரதான சவாலே- யாழ்ப்பாணத்தாரின் “மனநிலை“தான். உதவித் திட்டங்களில் வரிசையில் நிற்பார்கள். தேர்தலிலும் “அண்ணே உங்களிற்குத்தான் குத்தினேன்“ என்பார்கள். ஆனால், ஈ.பி.டி.பியின் வாக்கு வங்கி எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட பிரிவுகள், பிரதேசங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது.

இதனால் கவர்ச்சிகரமான வேட்பாளர்களை ஈ.பி.டி.பி கண்டறிவது சிரமம். இந்த பிரச்சனைதான் இந்த முறையும் உள்ளது. ஈ.பி.டி.பிக்குள் அல்லாமல் வெளியிலிருந்தும் வேட்பாளர்களை கொண்டு வர வேண்டுமென கடந்த தேர்தலில் வெளியாட்களையும் இறக்கினார்கள். அதுவும் சரிவரவில்லை. வெளியிலிருந்து வந்த வேட்பாளர்களை விட, ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்கள் அதிக வாக்கெடுத்தனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கின் பல துறைகளிலுமிருந்த தமிழ் அதிகாரிகள் ஈ.பி.டி.பியுடன் ஓரளவு நெருக்கத்தை பேணினார்கள். அதிலிருந்து சில வேட்பாளர்களை எடுக்கலாமென ஈ.பி.டி.பி நினைத்திருந்தது. குறிப்பாக கல்விப்புலத்தில் பதவி உயர்வுகளிற்காக பலர் ஈ.பி.டி.பியுடன் அனுசரணையாக இருந்தனர்.

ஆனால், 2015 இன் பின்னர் அவர்கள் அத்தனை பேரும், தமிழரசுக்கட்சி முகாம் ஆதரவாளர்களாக செயற்படுகின்றனர். அடுத்த லிஸ்றில் களமிறக்கலாமென ஈ.பி.டி.பி கணக்கு போட்டு வைத்திருந்த சிலர், இப்போது தமிழரசுக்கட்சியின் லிஸ்றில்!

ஆக, ஈ.பி.டி.பிக்கு உள்ள பெரிய பிரச்சனை வேட்பாளர்கள்.

கடந்த முறை களமிறங்கிய அதே முகங்கள்தான் இந்த முறையும் களமிறங்க வாய்ப்புள்ளது.

கடந்தமுறை வடமாகாணசபை தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பில் யாழில் வெற்றிபெற்றவர்- கமலேந்திரன் மாத்திரம்தான். பின்னர் கொலை வழக்கில் சிக்கி கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

பின்னர் நடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தீவகத்தில், பொதுஜன பெரமுனவிற்காக வேலை செய்தார். அங்கு பெரமன சில ஆசனங்களை எடுத்தது. இப்போது அவரை மீளவும் ஈ.பி.டி.பிக்குள் இணைத்து விட்டார்கள்.

அனேகமாக அடுத்த வடமாகாணசபை தேர்தலில் அவர் களமிறக்கப்படலாம். எனினும், எதிர்தரப்பின் பிரச்சாரத்திற்கு வாய்ப்பான பிடியொன்றை கொடுத்ததாகவும் இருக்கும்.

என்றாலும், கவர்ச்சிகரமான பிரதான வேட்பாளர்கள் இன்மையால், ஓரளவு வாக்கு எடுப்பார்கள் என கருதப்படும் கமல் போன்றவர்களை களமிறக்குவதை விட கட்சிக்கு வேறு வழியில்லை.

உள்ளூராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு விழுந்த வாக்குகள், கட்சிக்கு நம்பிக்கையூட்டியிருந்தது. மாகாணசபை தேர்தலில், விக்னேஸ்வரனும் தனி அணியாக களமிறங்கினால், ஈ.பி.டி.பி ஆட்சியை பிடிக்கலாமென சில ஆலோசகர்கள் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரிவித்து வந்தார்கள்.

அவரும் அதை ஓரளவிற்கு நம்பியதாக தெரிந்தது. அதனால், நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து, தேர்தலில் களமிறங்கலாமா என்ற யோசனையில் இருந்தார்.

ஆனால் இப்பொழுது அந்த யோசனை கிட்டத்தட்ட இல்லையென்கிறார்கள். அனேகமாக, தவராசா போன்ற ஒருவரை முதன்மை வேட்பாளராக்கி, கட்சி ஆட்சியை பிடித்தால், எம்.பி பதவியை துறந்து விட்டு, மாகாண முதல்வராகலாமென்ற இன்னொரு திட்டமும் டக்ளஸிடம் உள்ளது. ஆனால், அந்த முதன்மை வேட்பாளர் யார் என்பதே கேள்வி.

ஆனால், இது பற்றி டக்ளஸ் தேவானந்தா அவ்வளவாக மற்றவர்களுடன் கதைத்தில்லை. இயக்கங்களின் ஸ்ரைல் அது.

ஆனால், அவருக்கு நெருக்கமானவர்களின் கணிப்பொன்று உள்ளது.

கட்சியின் செலவுகளிற்கு அப்பால், கட்சியை சார்ந்திருப்பவர்களின் குடும்ப பராமரிப்பு செலவு, கட்சியிலிருந்து மரணமடைந்தவர்களின் குடும்பங்களின் பராமரிப்பு செலவு, முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிலிருந்தபோது உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் பராமரிப்பு செலவு என ஈ.பி.டி.பிக்கு பெரும் நிதித்தேவை உள்ளது.

ஆளந்தரப்பாக, அமைச்சு பதவியில் இருந்து, வருமான மூலங்கள் இருந்தால் மாத்திரமே அந்த தேவையை சமாளிக்கலாம். 2015இன் பின்னர் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை கணிசமாக விற்றே ஈ.பி.டி.பி சமாளித்து வருகிறது.

இப்படியிருக்க, கட்சியில் மாற்றம்… வளர்ச்சி தெரிய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாழில் ஒரு ஆசனத்தை விட அதிகமாக எடுக்க வாய்ப்பேயில்லை. வேறு மாவட்டங்களில் ஆசனம் பெற வாய்ப்பில்லையென்ற நிலைமைதான் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் பெற்ற வாக்கு அதிகரிப்புத்தான் அண்மைய காலத்தில் கட்சிக்கு ஒரே ப்ளஸ்.

அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிக்கு சாதகமான முடிவு கிட்டாவிட்டால், அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவையும் அவர் எடுக்கலாம் என்கிறார்கள்!

அப்படியொரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா? ஈ.பி.டி.பியின் தேர்தல் கூட்டு இவைகளை பற்றி நாளைய பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts