கேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட கூட்டமைப்பின் பிரமுகர்.

கேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட கூட்டமைப்பின் பிரமுகர்.

கேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்; பொலிசார் அதிருப்தி: உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் பொலிசார் விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடி எற்பட்டதென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திர கடுமையான அதிருப்தியடைந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (06) சண்டே ரைம்ஸ் ஆங்கில இதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பளையில் கஞசாவுடன் கைதான கடத்தல்காரர்களையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் அழுத்தம் கொடுத்து விடுவித்துள்ளார். இந்த விவகாரம் உயர்மட்டத்திற்கு சென்றதையடுத்து, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயர்மட்ட விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

பளை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றை பற்றிய தகவல் கிடைத்ததும், பொலிஸ் சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர் என்றும், கஞ்சா கடத்தல்காரர்கள் பொலிசாரை தாக்கினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மேலதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட, மேலதிக பொலிசார் அனுப்பப்பட்டு கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “கஞ்சா கடத்தியமை, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது சுமத்தும் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக்தி மிக்க ஒருவர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினார்.

“நீங்கள் கைது செய்து வைத்திருப்பவர்கள் எமது ஆதரவாளர்கள். அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்“ என கட்டளையிடும் பாணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மறுபேச்சின்றி கஞ்சா கடத்தல்காரர்களை விடுதலை செய்தார்.

கைதான சந்தேகநபர்களில் ஒருவர், குறிப்பிட்ட அரசியல்வாதியின் வாகன சாரதியின் சகோதரர் ஆவார். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அந்த நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர்- ‘இவர்கள் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றுகிறார்கள்?’ என கோபமாக கேட்டார்“ என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணாதீர்கள்: கஞ்சா கடத்தல்காரர்கள் விடுதலை விவகாரம்; யார் அந்த கூட்டமைப்பு பிரமுகர்?… பின்னணியில் நடந்தது என்ன?- முழுமையான விபரங்கள்!

இந்த விடயத்தை பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக உள்ளதால், இந்த விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் திட்டமிட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைப்பு தொடர்புடைய செய்தி

கஞ்சாக்கடத்தல்காரர்கள் விடுதலை விவகாரம்; யார் அந்த கூட்டமைப்பு பிரமுகர்?… பின்னணியில் நடந்தது என்ன?- முழுமையான விபரங்கள்!

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைதானவர்களை விடுவிக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக முக்கியமான ஒருவர் உத்தரவிட்டார் என சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலை காலையில் வெளியிட்டோம்.

இதன்போது மேலதிகமாக சில தகவல்களை பெற்றுக்கொண்டோம். அதை வாசகர்களிற்காக தருகிறோம்.

முதலில், பொலிசாருக்கு உத்தரவிட்ட கூட்டமைப்பின் பிரமுகர் யார் என்ற கேள்வி வாசகர்களிற்கு இருக்கும். அவரை நாமும் வெளிப்படையாக அடையாளப்படுத்தவில்லை. காரணம், இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்றுதான் தெரிகிறது.

காகம் இருக்க பனம்பழம் விழுவது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறதென, உள்ளார்ந்த ரீதியில் சம்பவங்களை அறிந்தபோது தெரிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியொருவர் என்றளவில் அவர் பற்றிய அடையாளங்களை முடித்துக் கொள்கிறோம்.

நான்கைந்து தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறிப்பிட்ட எம்.பி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்திருக்கிறார். பொதுவாக நமது எம்.பிக்கள் பின்னிரவில்தான் கொழும்பிலிருந்து புறப்படுவார்கள்.

அதிகபட்சமாக கொழும்பு-யாழ்ப்பாண பயணத்திற்கு ஐந்து மணித்தியாலங்களை மட்டுமே செலவிடுவார்கள் பல எம்.பிக்கள். இந்த எம்.பியும் அப்படியானவர்தான்.

பின்னிரவில் புறப்பட்டு, வாகனத்தின் தூக்கத்தில் இருந்திருக்கிறார். அப்போது சாரதி திடீரென வாகனத்தை நிறுத்தி, தனது தம்பியை பொலிசார் கைது செய்துள்ளனர், அவர் பல்கலைகழக பட்டதாரி, சட்டத்தரணியை திருமணம் செய்தவர், காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப் போகிறார்கள், எப்படியாவது பொலிசில் கதைத்து விடுவிக்க வேண்டுமென கேட்டார்.

அதுதான், அந்த எம்.பிக்கு வில்லங்கம் பிடித்த கணம்.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். பொதுவாகவே எல்லா விடயத்திலும் பயங்கர கில்லாடியான எம்.பி,இப்படியான விசயங்களில் சட்டநுணுக்கங்களையெல்லாம் பார்ப்பார். ஆனால் பல வருடங்களாக தன்னுடன் சாரதியாக இருப்பவரின் நம்பிக்கையிலோ என்னவோ, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி தொடர்பேற்படுத்தி, அவரை விடுதலை செய்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

அவர்களை கைது செய்தது பெரிய ஒப்ரேசன் ஒன்று. பளை பொலிசார் அதற்காக பெரிய ரிஸ்க் எடுத்திருந்தார்கள். கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கை சேர்ந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். சக்தி மிக்க பிரமுகரே சொல்லிவிட்டாரே… பொலிஸ் பொறுப்பதிகாரி, அவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

விசயம் அத்துடன் முடிந்ததென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால், அதன்பின்னர்தான் வில்லங்கமே ஆரம்பித்தது. எவ்வளவு சிரப்பட்டு கஞ்சாவுடன் நாங்கள் கைது செய்ய, அரசியல்வாதிகளின் தலையீட்டில் விடுவதென்றால் இனி நாங்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிக்கவே போகவில்லையென பளை பொலிஸ்நிலைய மற்றும் தொடர்புடைய இளநிலை பொலிஸ் அதிகாரிகள் திணைக்களத்திற்குள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.

இதேசமயம், பொலிஸ் மற்றும் இதர புலனாய்வு சேவை முகவர்களும் இந்த விவகாரத்தை ஒட்டி தகவல்களை சேகரித்தனர். விடுவிக்கப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல்காரர்தான், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்தி விற்கும் “பிரபல தாதா“ ஒருவரின் நேரடியான லிங் இல் இருக்கிறார்… அவரது வீட்டுக்கு அடிக்கடி புதுபுது வாகனங்கள் வந்து செல்கிறது… இதையெல்லாம் தெரிந்தும் அவர்களை ஏன் விடுவிக்க பரிந்துரைத்தீர்கள் என அந்த புலனாய்வு வட்டாரங்கள், குறிப்பிட்ட எம்.பியின் உதவியாளர்களிற்கு தகவலை பாஸ் செய்திருந்தார்கள். அவர்கள் தகவல் கொடுத்தது நேற்று மதியம்!

இந்த தகவலை கேட்ட உதவியாளர்களிற்கு தலை விறைக்க ஆரம்பித்திருக்கிறது.

நேற்று மாலையே உதவியாளர்கள் பளை, வடமராட்சி கிழக்கு பகுதிகளிற்கு சென்று என்ன நடந்தது என்பதை விசாரித்திருக்கிறார்கள்.

கஞ்சாவுடன் பிடிபட்டவர்களை குறிப்பிட்ட எம்.பி நேரடியாக தலையிட்டு விடுதலை செய்வித்தார் என்று ஊருக்குள்ளே காட்டுத்தீயாக தகவல் பரவியிருந்தது. எப்படி தகவல் பரவியிருந்தது தெரியுமா?

விடுதலையான நால்வரும் ஊருக்குள் போய்- “நாம் யார் தெரியுமா? “அந்த எம்.பியின்“ ஆட்கள். “சாமானுடன்“ பிடிபட்டும் வந்துவிட்டோம் பார்த்தீர்களா?“ என கொலரை தூக்கி விட்டிருக்கிறார்கள். இதனால் வடமராட்சி கிழக்கு, பளை பகுதிகளில் இந்த தகவல் பரவலாக அடிபட்டுள்ளது.

உதவியாளர்கள் பரபரப்புடன் திரும்பி வந்து, நேற்று மாலைதான் குறிப்பிட்ட எம்.பியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். எம்.பிக்கும் பயங்கர அதிர்ச்சி. தனது பரிந்துரையில் விடுவிக்கப்பட்டவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டு உள்ளதென்பதையும், இந்த விவகாரம் இவ்வளவு சீரியசாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நேற்று மாலை- உதவியாளர்கள் சொன்னபோதுதான்- எம்.பி அறிந்து கொண்டார்.

எம்.பி திட்டமிட்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றினார் என கொள்ள முடியாது. அவரது பெயரையும், புகழையும் சிலர் தவறாக பாவிக்க முயன்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட எம்.பியின் சறுக்கல் என்னவென்றால், தனது நம்பிக்கைக்குரிய சாரதியென்றாலும், பரிந்துரைப்பதற்கு முன்னதாக கொஞ்சம் அவதானமாக இருந்திருக்கலாம் என்பதே.

இலங்கை அரசியலில் ஒரு கலக்கு கலக்கிய அதீத தன்னம்பிக்கையோ என்னவோ- இதெல்லாம் சின்ன விசயமாக இருக்கலாம் என்ற நினைப்பில்- எம்.பி அலட்சியமாக இருந்து விட்டார்.

தனது நம்பிக்கைக்குரிய சாரதிக்காக பரிந்துரைத்தது தன்னை இவ்வளவு பெரிய வில்லங்கத்தில் விழுத்துமென அந்த எம்.பி நினைத்திருக்கமாட்டார்.

பொதுவாக எல்லா அரசியல்கட்சிகளின் எம்.பிக்கள் மீதும் தமிழ்பக்கமும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளதுதான். அரசியல்ரீதியாக அவர்கள் தவறிழைத்தபோது, பிழையான முடிவுகளை எடுத்தபோது அவற்றை நேருக்கு நேராக சுட்டிக்காட்டினோம்.

ஆனால், இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியொருவரை அடையாளம் காட்டாமல், அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியதற்கு காரணம்- இது மேலே குறிப்பிட்டதை போல தற்செயலான ஒரு சம்பவம் என்பதாலேயே.

பொறுப்பான மக்கள் பிரதிநிதியொருவர் இந்த விவகாரத்தில் கூடுதல் அவதானமாக இருந்திருக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு இடம்தான் அவரது சறுக்கல் இடம். அதை அவர் சரி செய்வார் என நம்பலாம்.

அவரது அரசியல் எதிரிகள் இதை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கலாம். ஆனால், ஊடகமாக அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

வாசகர்களிற்கு மேலதிகமாக ஒரு கொசுறு தகவல்- நேற்று இந்த தகவல் கிடைத்ததும் எம்.பி பயங்கர அப்செட். நேற்றிரவு திட்டமிட்ட சில நிகழ்ச்சிகளையும் இரத்து செய்து விட்டார். தனது சாரதியையும் உடனடியாக நீக்கியதாக தகவல்!

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts