எதிர்பார்ப்புகளை சுமந்துவரும் 2019ஆம் ஆண்டே…!

எதிர்பார்ப்புகளை சுமந்துவரும் 2019ஆம் ஆண்டே…!

எதிர்பார்ப்புகளை சுமந்துவரும் 2019ஆம் ஆண்டே…!

நீ புதிர்களால் சூழ்ந்திருக்கும் தமிழர்களுக்கு மாற்றாண்டோ?”

விடைபெற்றுச்சென்ற 2018ஆம் ஆண்டின் நெருக்கடிகள் யாவும் 2019ஆம் ஆண்டில் எதிர்நோக்கவேண்டிய சவால்களை எம்முன் காட்டிநிற்கின்றன.

அரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம் போன்ற விடயங்களில், கடந்த 2018ஆம் ஆண்டு எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்பதை யாவரும் அறிவோம்.

முதலாவதாக, ஒரு நாட்டின் மிக முக்கியமான கருதுகோளான பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சிப்பாதையில் சென்றது. பொருட்களின் விலை அதிகரித்து, மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து என வாழ்வியல் சூழல் இருண்ட யுகத்தில் காணப்பட்டதெனலாம்.

வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை நோக்கிச் சென்றதோடு, இன்றும் அந்நிலை தொடர்கின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, கடந்த காலங்களை போலவே வார்த்தைகளுக்குள் தம்மை வரையறுத்துக்கொண்டது. தீர்வு விடயத்தில் மக்களின் காத்திருப்பு இந்த வருடத்திலும் தொடர ஆரம்பித்துவிட்டது.

காணி விடுவிப்பு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளிலும், 2018 எந்தவித முன்னேற்றத்தையும் தரவில்லை.

வடக்கிலுள்ள சுமார் 14,000 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்க, அவற்றில் வெறும் 1,099 ஏக்கர் காணிகளை மாத்திரம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் விடுவிப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

எனினும், 2018 டிசம்பருக்குள் வடக்கு கிழக்கில் படையினரிடமுள்ள சகல காணிகளும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமென ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்கவேண்டியுள்ளது.

மறுபுறம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை கண்ணாம்பூச்சி ஆட்டத்தை போலுள்ளது. எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை நடத்தி, கிளர்ந்தெழுந்து, இறுதியில் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு எட்டாக்கனியாகிவிட்டது.

தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் காணப்படும் குடுமிபிடிச் சண்டையில் பாதிக்கப்பட்டது என்னவோ தோட்டத்தொழிலாளர்கள்.

இந்த அத்தனை பிரச்சினைகளையும் மழுங்கடிக்கும் வகையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இலங்கை அரசியலில் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது.

இந்த அரசியல் சூழ்ச்சியானது, அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடத்தையும் கற்றுத்தந்துள்ளது. அரசியல் சூழ்ச்சியின் போது நீதிமன்றமும் நாடாளுமன்றமும் சுயாதீனமாக செயற்பட்டதில், அந்த சதி முறியடிக்கப்பட்டு இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி தொடர்கின்றது.

ஆனால், நல்லாட்சி தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு மிகவும் பாதகமான நிலையை ஏற்படுத்திவிட்டது. நல்லாட்சியின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டபோதிலும், அதன் பின்னரான ஆட்சியை நிர்ணயிப்பதில் சிறுபான்மை கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியதை கண்டோம். அதனை ஆட்சியாளர்களும் உணர்ந்திருப்பர்.

அதுமட்டுமன்றி, மக்களின் சக்திக்கு அப்பால் ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாதென்பதையும் அரசியல்வாதிகள் உணர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

இறுதியாக வடக்கு கிழக்கில் ஏற்கனவே காணிகளையும், சொத்துக்களையும், சொந்தங்களையும் பறிகொடுத்த மக்களுக்கு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக கடும் வெள்ளம் புரட்டிப் போட்டது. வடக்கில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

ஆக, 2018ஆம் ஆண்டு சோகங்களும், சூழ்ச்சிகளும், நெருக்கடிகளும், கெடுபிடிகளும் நிறைந்த ஆண்டாக அமைந்ததென்பதே உண்மை.

இவற்றின் தொடர்ச்சியோடு பயணிக்கப்போகும் 2019ஆம் ஆண்டு எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளப் போகின்றது?

ஒருபுறம் மாகாண சபை தேர்தல் தாமதமாகி வருகின்ற நிலையில், மறுபுறம் பொதுத் தேர்தலுக்குச் செல்வது தொடர்பாகவும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. எப்படிப் பார்த்தாலும், 2019ஆம் ஆண்டு தேர்தல் வருடமென ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இத்தனை காலமும் ஆட்சியாளர்களை நம்பி வாக்குகளை வழங்கிய மக்கள் அதன் பயன்களை அனுபவித்தார்களா? அவ்வாறாயின் இத்தேர்தல்களின் முடிவுகள் எவ்வாறு அமையுமென்பதை, நிச்சயமாக முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தீர்மானிக்கலாம். ஆனாலும், ஒரு நீண்டகால, நிலையான தீர்வை எதிர்பார்த்துள்ள மக்கள், குறுகிய கால நன்மைக்காக இம்முறையும் தமது வாக்குகளை வழங்குவார்களா?

நம்பிக்கையே வாழ்க்கை என்பதைப் போல, நன்மை நடக்குமென நம்பி 2019இற்குள் காலடி எடுத்துவைப்போம்.

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts