அரசியல் தீர்வு குறித்த தமிழர்களின் நம்பிக்கைகளை தகர்த்துவிடாதீர்கள்…

அரசியல் தீர்வு குறித்த தமிழர்களின் நம்பிக்கைகளை தகர்த்துவிடாதீர்கள்…

அரசியல் தீர்வு குறித்த தமிழர்களின் நம்பிக்கைகளை தகர்த்துவிடாதீர்கள்…

உரிமைகளுக்கான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் மிலேச்சத்தனமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடானு கோடி ரூபா மதிப்பிலான உடமைகளையும் இழந்து நிற்கும் தமிழர்களுக்கு அரசியல்தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை அருகிக்கொண்டுவருகின்றது.

இந்தநிலையில் அரசியல் தீர்விற்கான அடித்தளமாக பார்க்கப்படும் புதிய அரசியல்யாப்பு விரைவில் சமர்பிக்கப்படும் என்ற செய்தி அனைத்தும் வீணாய்ப்போய்விடவில்லை என்ற உணர்வைத்தந்துள்ளதோடு ஒரு வகையான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நெருக்கடிக்கு பின்னர் மீண்டுமாக பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரிக்கப்படாத நாட்டிற்குள் தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு குறிப்பாக புதிய அரசியல்யாப்பைக் கொண்டுவருவதற்கு தம்மலான இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் பெப்ரவரி மாதம் 4ம்திகதிக்கு முன்பாக புதிய அரசியல்யாப்பு வரைபு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்திலையில், தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கக் கூடிய உத்தேச அரசியலமைப்பு எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் என பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமங்க கூட்டமைப்பின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அமைச்சர் கிரியெல்லவின் இந்த அறிவிப்புகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் இந்நாட்டை உண்மையாகவே நேசிக்கும் எல்லாத் தரப்பினரதும் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும். இருந்தபோதிலும் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

இதன் விளைவாக இந்த நாடு சுமார் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்துக்கும் முகம்கொடுத்தது. அதனால் இந்நாடு விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளை சந்தித்ததோடு, கோடிக்கணக்கான பெறுமதிமிக்க அழிவுகளுக்கும் முகம்கொடுத்தது. இதனால் இந்நாடு பொருளாதார அபிவிருத்தியிலும் பல தசாப்தங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்த யுத்தம் முடிவுக்கு வந்து சுமார் 10 வருடங்களாகியும் இந்த யுத்தத்துக்கும் அதன் விளைவான அழிவுகளுக்கும் மூலகாரணமாக அமைந்த தேசியப் பிரச்சினைக்கு இற்றைவரையும் அரசியல் ரீதியாக தீர்வு காணப்படாதுள்ளது.

இந்நிலைமை இனியும் நீடிக்கக் கூடாதென தற்போதைய அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் நிமித்தம் வழிகாட்டல் குழுவும், உப குழுக்களும் அமைக்கப்பட்டன.

வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழு தம் அறிக்கையை வழிநடத்தல் குழுவுக்கு கையளித்திருக்கின்றது.

இவ்வாறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள பின்புலத்தில்தான் சுதந்திர தினத்துக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், இத்தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதும் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.

உண்மையில் இப்பிரச்சினை இனிமேலும் தொடர இடமளிக்கக் கூடாது. எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நியாயமான முறையில் இத்தேசியப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நாட்டின் மீது உண்மையாக பற்றுக் கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய நிலைப்பாடாகும்.

ஏனெனில், இந்நாடு தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாகவோ, வளர்முக நாடாகவோ இருக்க முடியாது. இந்த நாடு சுதந்திரமடையும் போது பொருளாதார அபிவிருத்தியில் இந்நாட்டை விடவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பல நாடுகள் இலங்கையை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்து விட்டன.

அதனால் ஏனைய நாடுகளைப் போன்று இந்நாடும் முன்னேற்றமடைய வேண்டும். வளர்ச்சியடைந்த தேசமாக மாற வேண்டும் . இதுதான் இந்நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களின் உண்மையான விருப்பமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுக்கின்ற நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன, பொதுஜன முன்னணி கடந்த வாரம் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் இப்பிரச்சினையை நீடிக்கச் செய்வதற்கான முன்சமிக்ஞயா என்ற கேள்வியை எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாம் இடமளிக்கப் போவதில்லை’ என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கூற்று நாட்டை உண்மையாக நேசிப்பவர்களைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்துள்ளது. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை குழப்பும் ஒரு செயற்பாடாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

இந்த தேசியப் பிரச்சினையானது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் தடைக்கல்லாக இருந்து வருவதால் கட்சி அரசியல் பேதங்களுக்கப்பால் சகல தரப்புக்களும் ஒன்றுபட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் மக்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவர்களின் கூற்றுக்கள் இத்தேசிய பிரச்சினையை மேலும் பல தசாப்தங்கள் நீடிக்க வழிவகுப்பதாகவே கருதவேண்டியுள்ளது. இது நாட்டின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை.

ஆகவே அரசியல் யதார்த்தத்தை உணர்ந்து கடந்தகால அரசியல் அனுபவங்களின் அடிப்படையில் தேசிய பிரச்சினை நியாயபூர்வமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதுவே நாட்டின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் செய்கின்ற பெரும் உபகாரமாக அமையும்.

இந்த நாடு பிரிக்கப்படாத ஐக்கியமான நாடாக இருக்கின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கின்றார். தமிழர்கள் இழிச்சவாயர்கள் அவர்களை ஏமாற்றிவிடலாம் என பெரும்பான்மை சமூகம் நினைத்தால் அவர்கள் தப்புக்கணக்கு போடுகின்றார்கள் என்பதை நினைவில் நிறுத்த விரும்புகின்றோம்.

ஏனெனில் மாறிவரும் உலக ஒழுங்கில் புவிசார் அரசியல் தேவைப்பாடுகளுக்காக வல்லரசு நாடுகள் ஏற்கனவே இருக்கின்ற நாடுகளை பிளவுபடுத்துகின்ற பல உதாரணங்களை நாம் அண்மைய வரலாற்றிலும் கண்டிருக்கின்றோம்.

தமிழர்களுக்கு தெளிவான அரசியல் பிரச்சனை இருக்கின்றது ஆட்சி அதிகாரத்தினை பெரும்பான்மை சிங்கள சமூகம் தமிழர்களோடு பகிர்ந்துகொள்ளாமையே அதற்கு முக்கிய காரணம் .

அரசியல் தீர்வுக்கு வழிசேர்க்கும் அரசியல்யாப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து தமிழர்கள் திருப்திகொள்ளும் வகையில் நிறைவேற்றத்தவறினால் இனப்பிரச்சனை நீண்டு கொண்டே செல்லும். பிரச்சனை இருந்தால் நிச்சயமாக அதனை பயன்படுத்தி பெரும் வல்லரசுகள் இலங்கை விடயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்க முடியாது என்பதை அனைவருக்கும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts