அரசியலுக்கு அழைக்கப்படும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ப.சத்தியமூர்த்தி!

அரசியலுக்கு அழைக்கப்படும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ப.சத்தியமூர்த்தி!

அரசியலுக்கு அழைக்கப்படும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ப.சத்தியமூர்த்தி; மாஸ் காட்டும் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியல்!- மாகாணசபை திருவிழா 1

அடுத்த மாகாணசபை தேர்தல் இந்த வருட நடுப்பகுதிக்கு முன்னர் நடக்குமென்பது உறுதியாகி விட்டது. பெரும்பாலான மாகாணசபைகளின் காலம் முடிந்து விட்டது. ஆனால் ஐ.தே.க அரசாங்கம் முதலில் ஜனாதிபதி தேர்தலை விரும்புவதால், மாகாணசபை தேர்தல் தள்ளிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், ஒருவழியாக ஐ.தே.கவை இழுத்து, இந்த வருட நடுப்பகுதியிலாவது தேர்தலை நடத்த, மைத்திரி தயாராகி விட்டார்.

மாகாணசபை தேர்தல் முடிவு சில நாட்களின் முன்னர்தான் அமைச்சரவையில் உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் எப்பொழுதோ தங்களை மெல்ல மெல்ல தயார்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

கட்சிக்குள் நடக்கும் உள்வீட்டு சங்கதிகள் வெளியில்- மக்களிற்கு- உடனடியாக தெரியாது என்பதால், உள்வீட்டுக்குள் நடக்கும் தயார்படுத்தல்கள் உடனடியாக மக்களிற்கு தெரியவர வாய்ப்பில்லை.

மலிந்தால் சந்தைக்கு வரும்தானே என, சிவனேயென அவர்கள் இருப்பார்கள். ஆனால், மலிவதற்கு முன்னரே சில சங்கதிகளை உங்களிற்கு இந்த பகுதியில் தருகிறோம்.

அடுத்த வடமாகாணசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் களமிறக்கப் போகும் வேட்பாளர்கள் யார்? ஏற்கனவே போட்டியிட்டவர்களில் யாருக்கு ‘கல்தா’ கொடுக்கப் போகிறார்கள்? யாருக்கு வெற்றிவாய்ப்புள்ளது? இது தொடர்பான முழுமையான அலசலை தரவிருக்கிறோம்.

எப்பொழுதும் ஆளும்கட்சியில் இருந்துதானே ஆரம்பிக்க வேண்டும்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறோம். இதை தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியென தொடர்ந்து எல்லா கட்சிகள் தொடர்பான தகவல்களையும் வெளியிடுவோம்.

கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிங்கிய எல்லோரும், வெற்றிபெற்று உறுப்பினர்களாக இருந்த எல்லோரும், அடுத்தமுறை களமிறங்கப் போவதில்லை. அதாவது, அவர்களாக இறங்காமல் விடப்போவதில்லை. கட்சி காய் வெட்டிவிடப் போகிறது.

கட்சியால் காய்வெட்டப்படும் லிஸ்றில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அதில் தமிழரசுக்கட்சி சார்பில் வெட்டிவிடப்படுபவர்களே அதிகம்.

வே.சிவயோகன், க.தர்மலிங்கம், ப.அரியரட்ணம் போன்றவர்கள் தமிழரசுக்கட்சி லிஸ்றில் உள்ளனர். மன்னாரின் சிராய்வா, பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

த.குருகுலராஜாவும், காய்வெட்டப்படுபவர்கள் லிஸ்றிலேயே வர வேண்டியவர். ஆனால், அவரை “மதம்“ காப்பாற்றி விடும் என கட்சிக்குள் அரசயல் புரசலாக பேச்சுள்ளது.

புளொட் சார்பில் மாகாணசபைக்கு சென்றவர்கள் இருவர். கஜதீபன், லிங்கநாதன். அவர்கள் அடுத்தமுறையும் தொடர்வார்கள்.

ரெலோ சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், க.விந்தன், ஆ.புவனேஸ்வரன், ஞா.குணசீலன், சபா.குகதாஸ் மாகாணசபையில் இருந்தார்கள். ரெலோவை பற்றி பின்னர் சொல்கிறோம்.

தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் வெட்டப்பட, செயற்றிறன் இல்லை, மூப்பு என இதற்கு பல காரணங்களை கட்சி உயர்பீடம் இதற்காக சொல்கிறது. ஆனால், இதில் ஒரு வில்லங்கமாக ஒற்றுமையும் உண்டு.

விக்னேஸ்வரனிற்கு எதிராக மாகாணசபைக்குள் தமிழரசுக்கட்சி குழப்பம் செய்தபோது, அதில் முழுமூச்சாக இவர்கள் பங்குபற்றியிருக்கவில்லை. குழப்பத்தில் பங்குபற்றியவர்களிற்கு எந்த சிக்கலுமில்லை! அவர்களின் ‘பெர்போமன்ஸில்’ கட்சிக்கு நல்ல திருப்தி!

சரி, அது உள்கட்சி விவகாரம். நமக்கு எதுக்கு வம்பு. விசயத்திற்கு வருகிறோம்.

மேற்படி உறுப்பினர்களிற்கு தெரியும்- அடுத்தமுறை தமக்கு போட்டியிடும் வாய்ப்பில்லையென்பது. அதற்காக இப்பொழுதே தலையால் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.

பொதுவாகவே இப்படியான விசயங்களில் நம்மாட்கள் தூக்கும் முதலாவது அஸ்திரம் சாதி.

சீவல் தொழிலாளர்களிற்கு கட்சி உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை, நாம் ஒற்றுமையாக செயற்பட்டு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை, தமது சமூகத்திற்குள் வே.சிவயோகன் ஆரம்பித்து விட்டார். கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர் பரஞ்சோதி போன்றவர்களையும் அரவணைத்து இந்த ‘போராட்டத்தில்’ இறங்கியிருக்கிறார்.

இந்த கோரிக்கை தேர்தல் சமயத்தில் வில்லங்கமாகி விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன், அச்சுவேலியை சேர்ந்த இராஜேந்திரத்தை பனை அபிவிருத்தி சபை தலைவராக நியமிக்கும் முயற்சியை தமிழரசுக்கட்சி மேற்கொள்கிறது.

தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர், கடந்த தேர்தலில் தமது சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டி, சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சேர்ந்திருந்தார். இப்பொழுது பனை அபிவிருத்திசபை தலைவர் பதவி கொடுத்து, அந்த சமூகத்தை சமாளிக்க கட்சி திட்டமிட்டுள்ளது.

கடந்த மாகாணசபை காலத்திலும் சிவயோகன் ஒன்றும் செய்யவில்லை, நோயாளியாகி விட்டார் என கட்சி கருதுகிறது. அடுத்தமுறை வெட்டப்படுபவர்கள் லிஸ்றில் அவரது பெயர்தான் முன்னணியில் உள்ளது. அதேபோல, கட்சிக்கு வில்லங்கம் கொடுக்ககூடியவரும் அவர்தான்.

அதேபோல, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் க.தர்மலிங்கத்தின் ‘சோலிக்கு போகாத’ போக்கு கட்சிக்கு பிடிக்கவில்லை. இன்னொரு முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அவர் பகிரங்கமாக கூறிவந்தாலும், ‘இன்னொருமுறை இருந்து விட்டு போவோம்’ கட்சி தலைமையின் காதில் விழக்கூடியவிதமாக செய்தி அனுப்பியுள்ளார்!

ஆனால் அவருக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை.

ப.அரியரட்ணத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை. முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னர், கல்வியமைச்சராகும் வாய்ப்பு அவருக்கு வந்தது. எனினும், தமிழரசுக்கட்சி அதை விரும்பவில்லை. ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழியும்படி அவருக்கு நெருக்கடி கொடுத்து, அவர் வேறுவழியின்றி ஆர்னோல்ட்டை முன்மொழிந்தார்.

தனக்கு சீட் கிடைக்கும் என்ற அரியரட்ணத்திற்கும் இருக்காது. தமிழரசுக்கட்சியில் போட்டியிட அவரும் விருபத்துடன் இருப்பதை போல தெரியவில்லை. க.வி.விக்னேஸ்வரன் அணியின் நாடியை பிடித்து பார்த்தார், அங்கிருந்து “கிரீன் சிக்னல்“ கிடைக்கவில்லை. அதனால், அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவே வாய்ப்புக்கள் அதிகம்.

தமிழரசுக்கட்சி வேட்பாளர் தெரிவில் முக்கிய செல்வாக்கு செலுத்துபவர்கள் கனடா கிளையினர். ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், இ.ஆர்னோல்ட், அ.அஸ்மின் போன்வர்கள்தான் கனடா கிளையின் லிஸ்றில் முன்வரிசையிலுள்ள பெயர்கள். ஆர்னோல்ட் மாநகரசபைக்கு சென்றுவிட்டார்.

அஸ்மின் கனடாவில் குடியுரிமை கோருகிறார். மற்றைய இருவரும் நிச்சயம் அடுத்தமுறையும் இடம்பெறுவார்கள். இதில் சயந்தன் ஒரு அமைச்சை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. “தென்மராட்சி அபிவிருத்திக்கு அமைச்சு ஒன்று அவசியம்“ என, பக்கத்து இலைக்கு சொதியாம் பாணியை ஆதரவாளர்களை கொண்டு ஆரம்பித்துள்ளார்.

பழையவர்களை காய்வெட்டுவது ஒன்று. புதிதாக ஆட்களை கொண்டு வருவது அடுத்த முக்கிய விசயம். யாழ், கிளிநொச்சியில் சில புதுமுகங்களை களமிறக்க, தமிழரசுக்கட்சி விரும்புகிறது.

அவர்களில் முக்கியமானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ப.சத்தியமூர்த்தி, மற்றையவர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் லலீசன்!

அவர்கள் களமிறங்குவார்களா?, என்ன பேச்சுக்கள் நடந்தன?, யார் டீல் பண்ணினார்கள்?- இந்த விடயங்களை நாளை தருகிறோம்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts