தமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கி தயாராக இருக்கின்றாரா?

தமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கி தயாராக இருக்கின்றாரா?

தமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா?

சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் விவாதிப்பதே மேற்படி கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

விக்கினேஸ்வரனையே தொடர்ந்தும் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாக இருந்திருக்கிறது.

அவர்களைப் பொருத்தவரையில் விக்கினேஸ்வரன் ஒரு அணியாகவும் தமிழரசு கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டால், தமிழரசு கட்சி நிச்சயம் தோல்வியடையும். கூடவே தாங்களும் தோவ்வியடைய நேரிடும்.

ஏனெனில் வடக்கு மாகாணத்தை பொருத்தவரையில் விக்கினேஸ்வரனுக்கே அதிக செல்வாக்குண்டு.

தற்போதைய சூழலில் அவருக்கு நிகரான ஒரு வேட்பாளரை எங்களால் நிறுத்த முடியாது.

எனவே இந்த விடயத்தை தொடர்ந்தும் இழுபட விடாமல் ஒரு முடிவுக்கு கொண்டுவருவதே நல்லது – என்றவாறு அவர்கள் வாதிட்டிருக்கின்றனர்.

பங்காளிக் கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பந்தன் வழமைபோல் தனது வாயையும், ஒரு கண்ணையும் மூடிக்கொண்டு, தலையை ஆட்டியிருக்கிறார்.

ஆனால் சம்பந்தன், அவர் போட்டியிடுவாரா என்று ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்.

மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர், விக்கினேஸ்வரன் அமைதியாக வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் ஒரு கணிப்பு சம்பந்தனிடம் இருக்கலாம்.

அதனையே சம்பந்தனும் சுமந்திரனும் விரும்பவும் கூடும். மிக விரைவில் சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் வழமைபோல் கொழும்பு சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் சந்திக்கவுள்ளதாகவும், அதன் போது சம்பந்தன் இது தொடர்பில் விக்கினேஸ்வரனிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் ஒரு தகவலுண்டு.

தமிழரசு கட்சி மிகவும் வெளிப்படையாகவே விக்கினேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

சம்பந்தனுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் காண்பிக்கப்பட்டாலும் கூட, அது உண்மையாக இருக்கமுடியாது.

ஏனெனில் சம்பந்தனுடன் கலந்தோசிக்காமல் சுமந்திரன் செயற்பட்டுவருகின்றார் என்று ஒருவர் கூறினால் அதுவும் நம்பக் கடினமானது.

சம்பந்தனை பொருத்தவரையில் தனது சாமர்த்தியத்தின் மீது அவருக்கு அதிக நம்பிக்கை இருக்கலாம்.

எனவே விக்கினேஸ்வரன் விடயத்தையும் தன்னால் வெற்றிகரமாக கையாள முடியுமென்று அவர் நம்பலாம்.

ஏனெனில் முன்னர் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த முற்பட்ட வேளையிலும் கூட, சம்பந்தன் அதனை மிகவும் இலகுவாகக் கையாண்டிருந்தார்.

அப்போது தமிழரசு கட்சியின் கதையைக் கூட சம்பந்தன் பொருட்படுத்தியிருக்கவில்லை.

ஏனெனில் அன்றைய நிலையில் தமிழசு கட்சியின் மாவட்ட கிளைகள் அனைத்தும் மாவை சேனாதிக்கு ஆதரவாகவே செயற்பட்டிருந்தன ஆனால் எதனையுமே சம்பந்தன் பொருட்படுத்தியிருக்கவில்லை.

இறுதியில் மாவைசேனாதிராஜா உட்பட அனைவருமே சம்பந்தன் முன்னால் முழந்தாழிட்டனர்.

எனவே தன்னால் விடயங்களை இலகுவாக கையாள முடியுமென்று சம்பந்தன் ஒரு வேளை எண்ணியிருந்தால், அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் முடியாது.

ஏனெனில் சம்பந்தன், தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் செய்யாவிட்டாலும் கூட, தனது கட்சிக்குள், கூட்டமைப்புக்குள் தான் செய்ய நினைக்கும் அனைத்தையுமே வெற்றிகரமாகவே செய்து முடித்திருக்கின்றார்.

எனவே விக்கினேஸ்வரனை கொண்டுவந்தது போன்றே, அவரை இலகுவாக வீட்டுக்கு அனுப்பவும் தன்னால் முடியுமென்று சம்பந்தன் நினைத்திருக்கலாம்.

நான் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஒரு முடிவை எடுக்குமாறு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

ஆனால் சம்பந்தனோ அது தொடர்பில் இதுவரை பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படியாயின், சம்பந்தனின் சதி மூளை வேறு ஏதும் கணக்கை தீட்டுகின்றதா?

ஒரு வேளை சம்பந்தன் ஒரு கணக்கை போடலாம் ஆனால் சம்பந்தனின் சதிக் கணக்குக்குள் அகப்படக் கூடியளவிற்கு விக்கினேஸ்வரன் அந்தளவு பலவீனமாகவா இருக்கின்றார்?

இன்றைய நிலையில் விக்கினேஸ்வரனை பொருத்தவரையில் அவர் மீது வடக்கு மக்கள் வைத்திருக்கும் மதிப்பு ஒன்றுதான் அவரது பலம்.

அதைத் தவிர அவரிடம் கட்சிப்பலமோ அல்ல ஆளணிகளோ எதுவுமில்லை. ஆனால் தேர்தல் அரசியலுக்கு மக்களின் அபிமானம் ஒன்றுதானே பலம். அந்த வகையில் நோக்கினால் விக்கினேஸ்வரன் பலமாகவே இருக்கின்றார்.

அவரது பலமும், அவர் தனித்துச் சென்றுவிடுவாரோ என்னும் பயமும்தான் தமிழரசு கட்சியின் பலவீனமாக இருக்கிறது. எனவே இந்தப் பின்புலத்தில் நோக்கினால், தமிழரசு கட்சி நிச்சயம் சில வியூகங்கள் தொடர்பில் சிந்திக்காமல் இருக்காது.

அந்த வகையில் தமிழரசு கட்சியின் முதல் வியூகம் விக்கினேஸ்வரனை அமைதியாக ஓதுங்கச் செய்வதாகவே இருக்கும்.

ஒரு வேளை இந்த இடத்தில் ஒரு மாற்று யோசனையை சம்பந்தன் முன்வைக்கக் கூடும்.

தேசிய பட்டியல் மூலம் ஒரு வாய்ப்பு தருவதாக சம்பந்தன் கூறலாம். அத்தோடு, கூட்டமைப்பின் உப தலைவர் என்றும் அந்தஸ்த்தையும் தருவதாகவும் கூற இடமுண்டு.

இதனை விக்கினேஸ்வரன் நிச்சயம் ஏற்கமாட்டார் என்பதை தெரிந்துகொண்டே இவ்வாறானதொரு தெரிவை சம்பந்தன் முன்வைப்பார்.

இதன் மூலம் விக்கினேஸ்வரனை பதவி நலன் சார்ந்து சிந்திக்கும் ஒருவர் என்று காட்டுவதே சம்பந்தனின் நோக்கமாக இருக்கலாம்.

இதன் மூலம் விக்கினேஸ்வரனுக்கு ஒரு விதமான உளச்சிக்கலை ஏற்படுத்தி அவரை தானாகவே ஓதுங்கச் செய்யலாம் என்றும் சம்ந்தனின் ஒரு கணக்கைப் போடலாம்.

விக்கினேஸ்வரன் ஒரு நேர்மையான மனிதர் என்னும் வகையில் இவ்வாறான சூழலில் அவர் அமைதியாக வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் ஒரு வியூகம் சம்பந்தனிடம் இருக்காதென்று கூறமுடியாது.

மேற்படி கணக்கு பிழைக்கும் போது, சம்பந்தன் பங்காளிக் கட்சிகளின் கோரிக்கை தொடர்பில் சிந்திக்க இடமுண்டு.

அதாவது, விக்கினேஸ்வரனை அமைதியாக வெளியேற்ற முடியாமல் போகும்போது மட்டும்தான், சம்பந்தன் அந்த இரண்டாவது தெரிவு தொடர்பில் சிந்திப்பார்.

அவ்வாறானதொரு சூழலில், அடுத்த வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக நீங்களே நில்லுங்கள் என்று சம்பந்தன் கூறக் கூடும்.

ஆனால் இவ்வாறு சம்பந்தன் கூறினாலும் அதனை எதிர்த்து தமிழரசு கட்சி பெரியளவில் செயற்படுவதற்கான ஒரு சூழலும் தோற்றுவிக்கப்படும்.

எதிர்ப்பை காரணம் காட்டியே சம்பந்தன் பின்னர் கைவிரிக்கலாம். அதாவது விக்கினேஸ்வரனை நம்பியிருக்கச் செய்து நடுவீதியில் விடும் தந்திரோபாயம்.

அதாவது விக்கினேஸ்வரனை அமைதியாக வழியனுப்ப முடியாவிட்டால் விக்கினேஸ்வரனை, அவரது அரசியல் இருப்பிற்காக இயங்காமல் பார்த்துக் கொள்வதுதான் சம்பந்தனின் இரண்டாவது வியூகமாக இருக்கும்.

இன்று விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக பேசும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் போது சம்பந்தனுக்கு எதிராக செயற்படுவார்கள் என்பது சந்தேகமே!

அவ்வாறானதொரு சூழலில் விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்படுவாராயின், ஒற்றுமையை சீர்குலைக்கின்றார் என்று கூறி விக்கினேஸ்வரனது மக்கள் ஆதரவை சிதைக்க முடியும்.

அப்படியொரு நிலைமை ஏற்படும்போது, இன்று விக்கினேஸ்வரனை எங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்று வாதிட்டுவரும் பங்காளிக் கட்சிகள் எவையும் விக்கினேஸ்வரனுடன் கைகோர்ப்பார்கள் என்றும் நம்பமுடியாது.

எனவே விக்கினேஸ்வரன் தனது அரசியல் பயணம் தொடர்பில் சிந்திக்கும் போது சம்பந்தனை குறைத்து மதிப்பிடுவாரானால் அதன் விளைவை அவர் அரசியல் அரங்கில் நிச்சயம் எதிர்கொள்ள நேரிடும்.

அதிகாரம் என்பது எங்களிடம் என்ன இருக்கிறது என்பது மட்டுமல்ல எங்களிடம் இருப்பதைப் பற்றி எங்களின் எதிரி என்ன நினைக்கிறான் என்பதிலும்தான் தங்கியிருக்கிறது.

அந்த வகையில் தமிழரசு கட்சியின் வியூகங்கள் எவ்வாறு அமையலாம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப காய்களை நகர்த்த வேண்டிய தனது பொறுப்பில், விக்கினேஸ்வரன் அசட்டையாக இருந்துவிட முடியாது.

விக்கினேஸ்வரனுக்கு தொடர்ந்தும் அரசியலில் நீடிக்கும் ஆர்வம் இல்லாவிட்டால் இது தொடர்பில் விவாதிக்க ஒன்றுமில்லை.

– யதீந்திரா-

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts