நடுவானில் கண்ணாடி வெடித்து வெளியே இழுக்கப்பட்ட விமானி!

சீனாவின் சிசுவான் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்றின் விமானியறைக் கண்ணாடி ஜன்னல் விழுந்ததில், துணை விமானி ஒருவர் விமானத்தை விட்டு வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

32 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, விமானி அறைக்குள் திடீரென பலத்த ஓசை கேட்டதாக விமானி கூறினார்.

உடனடியாக, விமானி அறைக் காற்றழுத்தம் குறைந்தது. அதே நேரத்தில் விமானி அறையின் வலப்பக்க ஜன்னலின் கண்ணாடித் தடுப்பைக் காணவில்லை.

பாதுகாப்பு இருக்கை அணிந்திருந்த துணை விமானி, அந்தச் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டதாக விமானி குறிப்பிட்டார். இலேசான சிராய்ப்புகளோடு துணை விமானி உயிர் பிழைத்தார்.

விமானத்தில் பயணித்த 119 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.

பகிர்வதற்கு