காத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா!

உலக கால்பந்து இரசிகர்களே கண்ணத்தில் கை வைத்து ஆவலுடன் காத்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்து திருவிழா நடைபெற இன்னமும் 10 நாட்களே உள்ளது.

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளையாட்டு முதன்மையாக கொள்ளப்பட்டாலும் உலகெங்கிலுமுள்ள மக்களால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடப்படும் விளையாட்டாக கால்பந்தாட்டமே அமைந்துள்ளது.

உலகின் முதன்மை நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையிலே உள்ள மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193 ஆக உள்ள நிலையில், உலகில் 200ற்கும் அதிகமான நாடுகளில் கால்பந்தாட்டத்தை விளையாடுகின்றனர் என்றால் அதன் பெருமையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆம்! எந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடமின்றி உலகின் மிகவும் பிரபல்யமான விளையாட்டு என்ற பெருமையை கால்பந்தாட்டம் தனதாக்கிக்கொள்கின்றது.

உலகின் மூலைமுடுக்கெல்லாம் விளையாடப்படும் கால்பந்தாட்ட விளையாட்டின் உன்னதத் திருவிழாவான உலகக்கிண்ண கால்பந்தாட்டம், 1930ஆம் ஆண்டில் முதன் முறையாக உருகுவேயில் நடைபெற்றது.

இத்தனை ஆண்டுகளும் வெற்றிகரமாக கடந்த உலகக்கிண்ண கால்பந்து தொடர், இம்முறை அதன் 21வது அத்தியாயத்தை ரஷ்யாவில் அரங்கேற்றவுள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்தில் பனமா ஐஸ்லாந்து அணிகள் முதன் முறையாக பங்கேற்கின்றமை விசேட அம்சமாகும்.

இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகளாக ஐந்துமுறை சம்பியன்களான பிரேஸில், 2010ல் சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின், 2014ஆம் ஆண்டில் சம்பியன் பட்டம் வென்று நடப்புச் சம்பியன்களாக திகழும் ஜேர்மனி அணிகள் ஆகியன கால்பந்தாட்ட விற்பன்னர்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றைத்தவிர பிரான்ஸ், பெல்ஜியம், ஆர்ஜென்டீனா அணிகளும் இம்முறை அதிகம் பேசப்படும் அணிகளின் பட்டியில் உள்ளன.

இம்முறை உலகக்கிண்ண போட்டிகளில் நான்குமுறை சம்பியன்களான இத்தாலி அணியும் என்றுமே எதிரணிகளுக்கு சவால் விடுக்கின்ற நெதர்லாந்து அணியும் விளையாடாமை கால்பந்தாட்ட இரசிகர்களை கவலைகொள்ள வைத்துள்ளதென்றால் மிகையல்ல.

இதெல்லாம் ஒருபுறமிருக்க வீரர்கள் முட்டி மோதி, ஆனந்த கண்ணீருடன் கையில் ஏந்த காத்திருக்கும் உலகக்கிண்ணம் ரஷ்யாவின் மொஸ்கோவில் காட்சிப்படுத்தப்பட்டது.

கிரம்ளினில் அமைந்துள்ள மனேஷ்னையா சதுக்கத்தில், ஜேர்மன் கால்பந்து நட்சத்திரமான லோதார் மத்தூஸால் மக்களின் முன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ரஷ்யா, பிபா அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உலகமே கண்விழித்துக் காத்துக்கொண்டிருக்கும் இந்த உலகக்கிண்ண கால்பந்து திருவிழா, நிச்சயம் இரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாவே அவர்களை குதூகலப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பகிர்வதற்கு