அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் இல்லை!

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது ராஜபக்ஷர்கள் மத்தியில் பனிப்போரை ஏற்படுத்தியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக்ஷ குடும்பத்துக்குள் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூட்டு எதிரணியின் உறுப்பினர்களும் இது குறித்த பல்வேறு இடங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெற்றுக்கொளவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி தேர்தலுக்கு இன்னும் அதிக காலப்பகுதி இருப்பதால் தற்போதே இந்த முடிவை அறிவிக்கவேண்டியதில்லை எனவும், பொறுமையாக எமது முடிவை அறிவிப்போம் எனவும் கூறியிருந்த நிலையில் இவ்வாறு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பகிர்வதற்கு